

லக்னோ,
கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்திலும் வரும் 24 ஆம் தேதி வரை பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தில் வரும் 31-ந் தேதி, காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஊரடங்கின் போது தடுப்பூசி பணிகள், தொழில்துறை நடவடிக்கைகள், மருத்துவப் பணிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.