ஊரடங்கு: நாக்பூரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிப்பு; தீவிர சோதனை

ஒரு வார கால ஊரடங்கை முன்னிட்டு நாக்பூர் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு: நாக்பூரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிப்பு; தீவிர சோதனை
Published on

நாக்பூர்,

இந்தியா கொரோனா தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்பட்டபோதிலும், நாட்டில் குணமடைந்தோர் விகிதமும் அதிகம் உள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாகமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.

இதேபோன்று, தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகின்றன. மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு அமலுக்கு வந்தது.

இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும். மருந்து பொருட்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலான நிலையில், மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி உத்தரவிடப்பட்டன.

பொதுமக்களும் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவைகளன்றி வெளியே வராமல் கூடியவரை தவிர்த்தனர். வாகன போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஒரு வார கால ஊரடங்கை முன்னிட்டு நாக்பூர் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வெளியே வருவோரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீசார் காரணங்களை கேட்டறிந்த பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்குகின்றனர்.

இதுபற்றி காவல் ஆணையாளர் அமிதேஷ் குமார் கூறும்பொழுது, நகர் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோர் அல்லது தேவையின்றி தெருக்களில் சுற்றுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com