கரையைக் கடக்கத் தொடங்கியது அக்வான் புயல்: ஓடிசாவில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கரையைக் கடக்கத் தொடங்கியது அக்வான் புயல்: ஓடிசாவில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்
Published on: 

புவனேஸ்வர்,

அக்வான் புயல் ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியில் இன்று கரையைக் கடக்கிறது. இதையொட்டி ஒடிசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

புயலாக மாறியது

வங்கக்கடலில் கடந்த 15-ந்தேதி தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான இந்த வானிலைச் சுழற்சி, 18-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் என பெயர் பெற்றது. மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அக்வான் புயல், நேற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியது.

கரையைக் கடக்கத் தொடங்கியது

இந்த நிலையில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் அக்வான் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு 2 மணி நேரம் நீடிக்கும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல்காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

கனமழை எச்சரிக்கை

கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபாரா, கந்தமால், ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட் டுள்ளனர். மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள 5 மாவட்டங்களில் 941 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

புயலால் அதிகம் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக ஒடிசாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள், இலவச உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1,098 கர்ப்பிணிகளும் பாதுகாப்பாக மாற்றப்பட்டு உள்ளனர். தயார் நிலையாக மத்திய மாநில பேரிடர் மீட்பு குழுக்கள், தீயணைப்பு-அவசர நிலை பாதுகாப்பு குழுவினர் என 300 மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X