ஆந்திராவில் கனமழை:விசாகப்பட்டினம்- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குலாப் புயலின் தாக்கத்தால் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஆந்திராவில் கனமழை:விசாகப்பட்டினம்- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
Published on

விசாகபட்டினம்

ஒடிசாவையும் ஆந்திராவையும் மிரட்டிய குலாப் புயல் கரையைக் கடந்து வலுவிழந்தது. குலாப் புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்த பிறகும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மழை நீடிப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழையால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

கோதாவரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல மணி நேரமாக நீர் வடியாததால் மக்கள் அன்றாடப் பணிகளை முடிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குலாப் புயலின் தாக்கத்தால் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

விசாகபட்டினத்தில் சுமார் 2,100 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் சுமார் 1,500 பேரும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். விஜயநகரத்தைச் சேர்ந்த சுமார் 80 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

விசாகப்பட்டினம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது, சாலைகளில் தண்ணீர் தேங்கி சில கிராமங்களுக்கான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே அணை திறக்கப்பட்டதால், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் வட கடலோர ஆந்திராவை அடைந்துள்ளன, அதே நேரத்தில் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.

ஆந்திர துணை முதல்வர் தர்மனா கிருஷ்ண தாஸ், அதிகாரிகளுடன், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை நேற்று பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com