முரசு புயல்; ஆந்திரா, புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை

முரசு புயலை முன்னிட்டு ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் நகரில் கனமழை பெய்தது. ஓங்கோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது.
முரசு புயல்
Published on: 

ஓங்கோல்

முரசு புயலால் ஆந்திரா, புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்குகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்த புயல் இன்று அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

சூறாவளி காற்று

புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனினும், அர்னாப் புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப்போல முரசு புயலால் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை கூண்டு

முரசு புயல் பாதிப்புகள் மற்றும் மின் விநியோக சீரமைப்பு பணிகளுக்கு உதவ தமிழக அரசு சார்பில் ஆந்திராவுக்கு 500 மின்வாரிய பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கனமழை

இந்த நிலையில், காலை 3.30 மணியளவில், முரசு புயலை முன்னிட்டு ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் நகரில் கனமழை பெய்தது. ஓங்கோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. ஆந்திராவின் சிராலா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோர பகுதிகளில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.

புதுச்சேரியில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழைப்பொழிவு காணப்படுகிறது. முரசு புயல் அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறி, ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் அருகே, நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

X