

திருவனந்தபுரம்,
அரபிக்கடலில் உருவான ஒகி புயல் கடந்த 30ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன.
குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். ஒகி புயலில் மாயமான 619 மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களில் 433 பேர் தமிழ்நாட்டையும், 186 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஒகி புயல் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளது. தமிழகம், கேரளாவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். கேரளாவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பொன்துறையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை பிரதமர் மோடி சந்தித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், மாயமானவர்களை மீட்டு கொண்டுவர சாத்தியமான எந்தஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கும். எல்லா வழியிலும் மத்திய அரசு உங்களுடன் உள்ளது, எங்களுடைய மீட்பு நடவடிக்கை குறைந்துவிடாது. எல்லா வழியிலும் மத்திய அரசு உங்களுக்கு உதவிசெய்யும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மாயமானவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம், அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு முன்னதாக விடு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்போம், என கூறிஉள்ளார்.