

புதுடெல்லி
சைப்ரஸ் நாட்டின் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்துதவுலைட்ஸ், பிரதமர் மோடியின் அழைப்பையேற்று இந்தியாவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, நேற்று மும்பை நகருக்கு சென்றார்.
அவருடன் சைப்ரஸ் வெளியுறவு துறை மந்திரி கான்ஸ்டன்டினோஸ் கொம்போஸ், போக்குவரத்து துறை மந்திரி அலெக்சிஸ் வேவியேட்ஸ், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்கள் என உயர்மட்ட குழுவினர் வருகை தந்துள்ளனர். இது இந்தியாவுக்கான நிகோசின் முதல் பயணம் ஆகும்.
மும்பையில் அவர், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான வர்த்தக மாநாடு ஒன்றில் பங்கேற்றார்.
மும்பைக்கு சென்று விட்டு புதுடெல்லிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அவரை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைக்கான இணை மந்திரி அஜய் தம்தா வரவேற்றார்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பதவியை சைப்ரஸ் வகித்து வரும் நிலையில், இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, கலாசாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பின்டெக், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் வகையில் விரிவான பேச்சுவார்த்தைகளில் நிகோஸ் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2025-ம் ஆண்டு, சைப்ரசுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.
டெல்லியில் இருவரும் பலதரப்பு கூட்டங்களை ஒருங்கிணைப்பது உள்பட மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிகளில் பார்வைகளை பரிமாறி கொள்ள உள்ளனர். அதனுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை, நிகோஸ் சந்தித்து பேசவுள்ளார்.