பிரதமர் மோடியின் அழைப்பையேற்று சைப்ரஸ் ஜனாதிபதி இந்தியாவில் சுற்றுப்பயணம்

2025-ம் ஆண்டு, சைப்ரசுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று சைப்ரஸ் ஜனாதிபதி இந்தியாவில் சுற்றுப்பயணம்
Published on

புதுடெல்லி

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று, மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டின் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்துதவுலைட்ஸ் இந்தியாவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, இன்று முதல் 23-ந்தேதி வரையிலான 4 நாட்கள் அவர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.

அவருடன் சைப்ரஸ் வெளியுறவு துறை மந்திரி கான்ஸ்டன்டினோஸ் கொம்போஸ், போக்குவரத்து துறை மந்திரி அலெக்சிஸ் வேவியேட்ஸ், மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்கள் என உயர்மட்ட குழுவினர் வருகை தருகின்றனர். இது இந்தியாவுக்கான நிகோசின் முதல் பயணம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பதவியை சைப்ரஸ் வகித்து வரும் நிலையில், இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. நிகோஸ், இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, கலாசாரம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பின்டெக், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் வகையில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு, சைப்ரசுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com