'100 சதவீதம்' விளம்பர வாசகத்துக்கு தடை: டெல்லி ஐகோர்ட்டில் டாபர் நிறுவனம் வழக்கு

'100 சதவீதம்' என்ற விளம்பர வாசகத்துடன் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, டாபர் இந்தியா நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்
Published on

புதுடெல்லி:

தேன், பசு நெய், சமையல் எண்ணெய், ஆப்பிள் சைடர் வினிகர், விர்ஜின் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், இளநீர், தேங்காய் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களில், "100 சதவீதம் இயற்கையானது", "100 சதவீதம் தூய்மையானது", "100 சதவீதம் தூய்மை உத்தரவாதம்", "100 சதவீதம் ஆர்கானிக்" போன்ற வாசகங்களை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) குற்றம்சாட்டியது. இந்த வகையான "100 சதவீதம்" என்ற வாசகங்கள் தெளிவற்றவை, சரிபார்க்க முடியாதவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விளம்பரங்கள் மற்றும் கோரிக்கைகள்) விதிகள், 2018-க்கு முரணானது என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்தது. இதையடுத்து, இத்தகைய விளம்பர வாசகங்களுடன் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து, 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் டாபருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து டாபர் இந்தியா நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விளக்கம் கேட்டு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமலும், தங்கள் தரப்பை விளக்க வாய்ப்பு அளிக்காமலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இயற்கை நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தடை உத்தரவை பிறப்பிக்க எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.-க்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த உத்தரவு தெளிவற்றதாகவும், உரிய பரிசீலனை இல்லாமல் பிறப்பிக்கப்பட்டதாகவும் டாபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், "100 சதவீதம்" என்ற வாசகத்தை பல்வேறு உணவுப் பொருட்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், டாபர் நிறுவனத்தை மட்டும் பொதுவெளியில் குறிப்பிட்டு உத்தரவு வெளியிட்டது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுவர்ண காந்தா சர்மா முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com