மராட்டியத்தில் கல்வீச்சில் பஸ்கள், தீயணைப்பு வாகனம் சேதம்

மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 3 மாவட்டங்களில் திடீர் வன்முறை ஏற்பட்டது. கல்வீச்சில் தீயணைப்பு வாகனம், பஸ்கள் சேதம் அடைந்தன.
மராட்டியத்தில் கல்வீச்சில் பஸ்கள், தீயணைப்பு வாகனம் சேதம்
Published on

மும்பை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்தை கண்டித்து நேற்று நாந்தெட், பீட், பர்பானி மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் உள்ள யஸ்வந்த்ராவ் சவான் சவுக்கில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாந்தெட்டில் ரெயில் நிலையம் அருகில் நின்ற பஸ்சை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். பர்பானியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் தீயணைப்பு வாகனம் மீது கல்வீசி சேதப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களால் பெரும் பரபரப்பு உண்டானது.

மராட்டியத்தில் மேலும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் வதந்தி மற்றும் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் என மராட்டிய போலீஸ் டுவிட்டரில் கேட்டுக் கொண்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com