

புதுடெல்லி,
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன்சிங் மற்றும் ராஜாங்க மந்திரிகள் கஜேந்திரசிங் ஷெகாவத், கிருஷ்ணாராஜ் மற்றும் மத்திய கால்நடைத்துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்து, தமிழக கால்நடைத்துறை தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும் சந்தித்தார்.
இந்த சந்திப்புகளின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழக கால்நடைத்துறை செயலாளர் டாக்டர் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்பிறகு தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்கு திரும்பிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை மந்திரியை சந்தித்து, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கால்நடைத்துறையில் தமிழகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதை சொன்னோம்.
தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகளும், 12 ஆயிரத்து 500 பேருக்கு கறவைப்பசுக்களும் வழங்கப்படுகிறது என்றும், வருகிற புத்தாண்டு தினத்தில் (1ந் தேதி) 77 ஆயிரம் கிராமப்புற பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார் என்பதையும் மத்திய மந்திரியிடம் தெரிவித்தோம். இதை கேட்டு மந்திரி மகிழ்ச்சி அடைந்ததோடு முதல்அமைச்சரை பாராட்டினார்.
மேலும் தமிழக கால்நடைத்துறை செயல்படுத்த இருக்கும் திட்டங்களுக்காக ரூ.950 கோடி நிதி கேட்டோம். இதில் கால்நடை மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.308 கோடியும், கால்நடை தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் திட்டத்துக்காக ரூ.101 கோடியும், கால்நடை உற்பத்தி, பசுந்தீவன அபிவிருத்தி மற்றும் இன்னல் காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கும் பணிகளுக்காக ரூ.161 கோடியும் கேட்கப்பட்டு உள்ளது.
அத்துடன் சேலம் மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 1,800 ஏக்கர் நிலத்தில் ரூ.750 கோடி செலவில் அமையவுள்ள கால்நடை பூங்காவுக்காக முதல் கட்டமாக ரூ.380 கோடி கேட்டு இருக்கிறோம். இந்த பூங்காவில் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் கட்ட இருக்கிறோம். நாட்டு நாய்கள், நாட்டுக்கோழிகள், நாட்டு இன ஆடு, மாடுகளையும் உற்பத்தி செய்ய இருக்கிறோம். மேலும் பால், முட்டை, இறைச்சி, மீன் பதப்படுத்தும் வசதியும் செய்யப்படும்.
இந்த நிதியில் முதல்கட்டமாக எவ்வளவு அதிக தொகை கொடுக்க முடியுமோ அதை ஜனவரி மாதத்தில் கொடுப்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்து உள்ளார். அதைப்போல இயற்கை சீற்றங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க புயல் பாதித்த 12 மாவட்டங்களிலும் கால்நடைகளுக்கென்று தனி மையங்கள் தேவை என்றும் கேட்டோம். அதையும் செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்.
கஜா புயலை பொறுத்தவரை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.150 கோடி கேட்கப்பட்டு உள்ளது. அதை ஜனவரி மாதம் ஒதுக்குவதாக மந்திரி ராதாமோகன் சிங் கூறினார்.
புயலில் சேதம் அடைந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.100 கோடி கேட்டோம். இதற்காக ரூ.92 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். அதைப்போல சேதம் அடைந்த தோட்டக்கலை பயிர்களை அகற்றுவதற்காக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.172 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகை கூடிய விரைவில் விடுவிக்கப்படும். மரங்களுக்கான இழப்பீட்டு தொகை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.