ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: கேரள அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

நாய்களுக்கு விஷம் வைத்தோ, தடியால் அடித்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது.
ஆபத்தான தெருநாய்கள் கருணைக்கொலை.
தெரு நாய்கள்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் மனிதர்களுக்கு ஆபத்தாக விளங்கும் மற்றும் வெறிநாய்க்கடி உள்ளிட்ட குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கேரள உள்ளாட்சித் துறை இதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கருணைக் கொலைக்கான நாய்கள்

கேரளாவில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் வெறி நாய்க்கடியினால் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். எனவே, வெறி பிடித்த குணப்படுத்த முடியாத தீவிர நோய் உள்ள மற்றும் மனிதர்களைக் கடுமையாகத் தாக்கக்கூடிய ஆபத்தான தெரு நாய்கள் மட்டுமே கருணைக் கொலை செய்யப்படும். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வண்ணம் தெருக்களில் திரியும் ஆரோக்கியமான நாய்கள் கருணைக்கொலை செய்யப்படாது.

கொடூரமான முறைகளுக்குத் தடை

பிடிக்கப்படும் நாய்கள் உடனடியாக கொல்லப்படாது. அவை 2 முதல் 3 நாட்கள் வரை பிரத்யேக காப்பகங்களில் தனிமைப்படுத்தப்படும். அந்த நேரத்தில் விலங்கு நல ஆர்வலர்களோ அல்லது பொதுமக்களோ அந்த நாய்களைத் தத்தெடுத்துப் பராமரிக்க முன்வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். நாய்களுக்கு விஷம் வைத்தோ, தடியால் அடித்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது. தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் முன்னிலையில், வலி இல்லாத மருத்துவ ஊசிகள் மூலமாக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரிந்துரைக் குழு

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் அரசு அதிகாரி, கால்நடை மருத்துவர் மற்றும் விலங்கு நல ஆர்வலர் அடங்கிய மேலாண்மைக் குழு அமைக்கப்படும். இக்குழுவின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுக்குப் பிறகே கருணைக் கொலை அனுமதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகப் பதிவேட்டில் குறிக்கப்பட்டு, மாநில அளவிலான உயர்மட்டக் குழுவால் தணிக்கை செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், விலங்கு நல விதிகளையும் மதிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com