

திஸ்பூர்,
அசாம் மாநிலம் கஹிலிபாரா பகுதியில், ஸ்கூட்டர்டில் வந்த மர்ம நபர்களால் பெண் ஒருவர் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கஹிலிபாரா பகுதியில் கடந்த 5-ந்தேதி அன்று அதிகாலை வேளையில், பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த 2 நபர்கள், திடீரென அந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்தாலும், அந்த பெண் தைரியமாக திருடர்களை எதிர்த்துப் போராடி, தனது உடைமைகளை விடாமல் பிடித்துக் கொண்டார். இதனால், திருடர்கள் ஸ்கூட்டரை நிறுத்தாமல் வேகமாக இயக்கினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்தப் பெண், ஸ்கூட்டருடன் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கொடூரமாக தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பெண் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, கவுகாத்தி நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கவுகாத்தி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த துணிகர கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய உதல்குரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த போரா (வயது 20) மற்றும் காம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் தாஸ் (வயது 25) ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். அவர்களிடம், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.