

திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதம் தரிசிக்க பக்தர்களுக்கான பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதி வசதிகளுக்கான ஆன் லைன் கோட்டாவை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை சேவை டிக்கெட்டுகள் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான எலக்ட்ரானிக் டிப் (மின்னணு குலுக் கல்) முறை மூலம் பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் திறந்திருக்கும். 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணி வரை கட்டணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் கோட் டாவை 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடும். அதேபோல், வருடாந்திர பவித்ரோற்சவங்கள் ஆகஸ்டு 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது. அது தொடர்பான டிக்கெட்டுகளும் 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ரூ.300 டிக்கெட்
'மெய்நிகர் சேவைகள்' மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரிசன ஸ்லாட்டுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம் டோக்கன்களுக்கான ஆன்லைன் கோட்டா 23-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும் வெளியிடப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தரிசனம் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன(ரூ.300) டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்கான கோட்டா 25-ந்தேதி மாலை 3 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.