

மைசூரு:
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக 9 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. மேலும் யானைகளின் பாகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தற்காலிக மருத்துவமனை, தற்காலிக பள்ளிக்கூடம் அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அரண்மனை வளாகத்தில் தங்கியிருக்கும் யானைகளுக்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தசரா யானைகளுக்கு தினமும் 20 கிலோ மீட்டர் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. நடைபயணம் முடிந்ததும் யானைகளின் பாதங்களில் நல்லெண்ணெய் போடப்படுகிறது. பின்னர் யானைகள் சிறிது நேரம் நீராடுகின்றன. இதையடுத்து, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. அதாவது நெல், புல், உப்பு, வெல்லம், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து உருண்டை பிடித்து வழங்கப்படுகிறது. அதன்பிறகு கரும்பு, வாழைப்பழம் கொடுக்கப்படுகிறது. பின்னர் ஓய்வெடுக்கும் யானைகளுக்கு பருப்புகளை வேக வைத்து நெய் ஊற்றி கொடுக்கப்படுகிறது. பின்னர் ஆலமர இலைகள், தென்னை ஓலைகள் வழங்கப்படுகிறது.