தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சதானந்த கவுடாவை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்

தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில், மத்திய மந்திரி சதானந்த கவுடாவை விழா மேடைக்கு ஏற விடாமல் போலீஸ்காரர் ஒருவர் தடுத்ததால் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சதானந்த கவுடாவை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்
Published on

மைசூரு,

மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி மைசூரு சாமுண்டி மலையில் நடந்தது. மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் தேரில் வீற்றிருக்கும் அம்மனுக்கு மலர்கள் தூவி எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா தசரா விழாவை தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் மத்திய மந்திரியும், முன்னாள் கர்நாடக முதல்-மந்திரியுமான சதானந்த கவுடாவும் கலந்து கொண்டார். முன்னதாக அவர் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சாமுண்டி மலைக்கு வந்தார்.

ஆனால் அவர் வருவதற்குள் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இதையடுத்து அவர் அவசர, அவசரமாக காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், சதானந்த கவுடாவை விழா மேடைக்கு செல்ல விடாமல் தடுத்தார். இதை எதிர்பாராத சதானந்த கவுடா கடும் கோபம் அடைந்தார்.

மேலும் அந்த போலீஸ்காரரை கடுமையாக கண்டித்து திட்டி எச்சரித்தார். இதைப்பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து சதானந்த கவுடாவை சமாதானம் செய்தனர். பின்னர் அவரை விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

சற்று கோபத்திலும், அதிருப்தியிலும் இருந்த சதானந்த கவுடா தொடக்க விழா நடந்து கொண்டிருந்தபோது பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடக்க நிகழ்ச்சியில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com