கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு; இன்று தொடங்குகிறது

சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக 60 கேள்விகளுக்கு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
File Photo (PTI)
File Photo (PTI)
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நடத்தப்படவில்லை என்று கூறி பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத், ஒக்கலிக சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து அந்த கணக்கெடுப்பு அறிக்கையை கைவிடுவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். அதைத்தொடர்ந்து புதிதாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அது செப்டம்பர் 22-ந் தேதி (இன்று) தொடங்கும் என்றும் சித்தராமையா அறிவித்தார்.

இந்த முறை புதிதாக 336 சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதில் குறிப்பாக சுமார் 47 கிறிஸ்தவ துணை சாதிகள் சேர்க்கப்பட்டன. இதற்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த புதிய சாதிகளால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட சில மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த கணக்கெடுப்பு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, குழப்பங்கள் தீர்க்கப்பட்டு திட்டமிட்டப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு 22-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது.இந்த பணியில் 1 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி 17 நாட்கள் அதாவது வருகிற அக்டோபர் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 7 கோடி பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள். மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கணக்கெடுப்பாளர்கள் 60 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க உள்ளனர். ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள், கால்நடைகள், கல்வி, பொருளாதார நிலை, மாதம் மற்றும் ஆண்டு வருமானம், வாகனங்கள், சொத்து விவரங்கள், வங்கி கடன், தனியாரிடம் இருந்து வாங்கிய கடன், நோய் பாதிப்புகள், மாற்றுத்திறனாளி விவரம், வேலை விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் வழங்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிறிஸ்தவ மதத்தில் 33 துணை சாதிவிவரங்கள் கைவிடப்பட்டு உள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன்நாயக் கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த துணை சாதிகள் குறித்த விவரங்களை சேகரிக்கலாம் என்றும், அதற்கென்று தனி பகுதி வழங்கும் முடிவை கைவிட்டு உள்ளதாகவும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒக்கலிகர் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சமூகங்களுக்கு மாநிலத்தின் வளங்களை பகிர்ந்து அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிக்கு அரசு முதல்கட்டமாக ரூ.420 கோடி .நிதி ஒதுக்கியுள்ளது.. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது முதல்-மந்திரி சித்தராமையாவின் கனவு திட்டம் ஆகும். இதற்கு காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவும் உள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com