

புதுடெல்லி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதில், இந்திய பொருட்களுக்கு 10 சதவீதம் என இருந்த வரியை 25 சதவீதம் என்றும் பின்னர், கூடுதலாக 25 சதவீத அபராத வரி என கூறி மொத்தம் 50 சதவீதம் என்றும் உயர்த்தினார்.
ரஷிய எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது என்றும், அதனால், போர் தளவாடங்கள் வாங்க அந்த நிதியை ரஷியா பயன்படுத்தி கொள்கிறது என குற்றம் சாட்டியும் இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்தது. இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை கடுமையான பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வரி குறைப்புக்கான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வரியை குறைப்பது தொடர்பான அறிவிப்பும் இருக்கும் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்று டிரம்ப் கூறினார். ரஷிய எண்ணெய்யை இந்தியா வாங்காது என உறுதி அளித்து உள்ளது என கூறி இந்த வரி குறைப்பை டிரம்ப் அறிவித்து உள்ளார். எனினும், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுபற்றி மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவலில், அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து தலைவர் மற்றும் அவருடைய குழுவினர் அந்நாட்டுக்கு செல்வதற்கான தேதி முடிவு செய்யப்படும்.
சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்து, பின்னர் இரு தரப்பிலும் வசதியான ஒரு தேதியை முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கான கூட்டம் நடைபெறும் என தெரிவித்து உள்ளது.
ஏனெனில், டிரம்ப்பின் வரிவிதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. சில வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர்.
எனினும், இரவோடு இரவாக இந்த வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தி, டிரம்ப் நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு ஒருபுறம் இருந்தபோதிலும், வரிவிதிப்பதற்கு என ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன. இதன்படி வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த சட்ட பிரிவின்படி, கட்டணம் செலுத்துதலில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்த டிரம்புக்கு (அதிகபட்சம் 15 சதவீதம்) அதிகாரம் உள்ளது. இந்த அடிப்படையில், அவர் வரியை 15 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தி அறிவித்து இருக்கிறார்.
அடுத்தடுத்த இந்த நடைமுறைகளால், அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.