

திருவனந்தபுரம்,
மகன் இறந்த துயரத்திலும், இளம் வயதில் கணவனை இழந்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமியாரின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பகுதியைச் சேர்ந்தவர் தாரா (வயது 60). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் கண்ணன் (32). இவருக்கும் கிருஷ்ணா (28) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணன், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் எதிர்பாராத மரணத்தால் மிகுந்த மனவேதனை அடைந்த கிருஷ்ணா, கணவரின் நினைவுகளுடன் மாமியார் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
இளம் வயதிலேயே விதவையான மருமகள் கிருஷ்ணாவின் எதிர்கால வாழ்க்கை இருண்டு விடக்கூடாது என தாரா கருதினார். அவரை தனது சொந்த மகளாகவே பாவித்த தாரா, கிருஷ்ணாவிற்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி, தகுதியான வாலிபர் ஒருவரை தேர்வு செய்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கிருஷ்ணாவிற்கு முறைப்படி மறுமணம் செய்து வைத்தார்.
மருமகளின் கண்ணீரை துடைத்து, அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ள மாமியார் தாராவின் இந்த தாயுள்ளம் கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.