மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி கைது

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார். #FarooqTakla
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி கைது
Published on

மும்பை,

1993 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் துபாய்க்கு தப்பிச்சென்றனர். பின்னர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் சென்று தஞ்சம் அடைந்தார். மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் சிறை வாசம் அனுபவித்து திரும்பினார். 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாகிர் மெர்ச்சண்ட் மற்றும் பெரோஸ்கான் ஆகியோருக்கு மும்பை தடா கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

இந்தநிலையில், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி பாரூக் டக்லா(வயது57) துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவர் மத்திய புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் மூலம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விமானம் மூலம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பாரூக் டக்லா துபாயில் தாதா தாவூத் இப்ராகிமின் நிழலுலக செயல்பாடுகளை கவனித்து வந்ததாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். பாரூக் டக்லா கைது செய்யப்பட்டு உள்ளதன் மூலம் தாவூத் இப்ராகிமும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ந்தேதி நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. மும்பை பங்கு சந்தை, காத்தா பஜார், லக்கி பெட்ரோல் பங்க், ஜாவேரி பஜார் உள்பட 12 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இந்த பயங்கர தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் மும்பை நகரமே ரத்தக்களறியானது. இப்போது தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான பாரூக் டக்லா கைது செய்யப்பட்டது வழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com