

ஜெய்ப்பூர்,
விரலில் ஏற்பட்ட காயத்துக்காக ராஜஸ்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற வாலிபர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். தான் உயிருடன் உள்ளதை நிரூபிக்க அவர் 25 நாட்களாக போராடி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆமெர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் சைனி (வயது 31). இவர் விரலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற கடந்த 3-ந்தேதி ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் வீட்டுக்கு திரும்பினார்.
ஆனால் அன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தினேஷ் என்ற பெயருடைய நபர் ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து தினேஷ் சைனி அங்கு சென்று பார்க்கும்போது, ஆஸ்பத்திரி ஆவணங்களில் அவர் இறந்த வர் என்று பதிவு செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கரோலி பகுதியைச் சேர்ந்த மற்றொரு நோயாளி, தினேஷ் சைனியின் அடையாள விவரங்களை கொண்டு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தபோது அவருக்கு அதிர்ச்சி மேலும் அதிகரித்தது. அன்று முதல், தினேஷ் சைனி, தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வருகிறார். இதற்காக அவர் பல முறை அலைக்கழிக்கப்பட்டார்.
இருப்பினும் அந்த தவறு இன்னும் திருத்தப்படவில்லை. கடந்த 21-ந்தேதி மீண்டும் இறந்தவர்கள் பட்டியலில் இடம்பெற் றிருப்பதாக ஒரு தகவல் அவருக்கு வந்தது. ஆனால் இன்னமும் தான் உயிருடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க அவர் போராடி வருகிறார்.
இது தொடர்பாக தினேஷ் சைனி கூறுகையில், "உயிருடன் உள்ள என்னை இறந்து விட்டதாக அறிவித்ததன் மூலம் என்னுடைய அடையாள ஆவணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். அவர்கள் செய்த தவறுக்கு நான் உயிருடன் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று வருமாறு என்னிடம் கூறுகின்றனர்” என வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் தீபக் மகேஸ்வரி கூறும்போது, "தவறு நடந்தது உண்மைதான். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.