கனடாவில் விபத்தில் பலி; புதுச்சேரி விமானி உடலை சொந்த ஊர் கொண்டுவர கவர்னரிடம் மனு

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மனோஜ் மற்றும் ஸ்ரீசரண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கனடாவில் விபத்தில் பலி; புதுச்சேரி விமானி உடலை சொந்த ஊர் கொண்டுவர கவர்னரிடம் மனு
Published on

புதுச்சேரி

கனடாவில் விபத்தில் பலியான புதுச்சேரி விமானி உடலை சொந்த ஊர் கொண்டுவர கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்த சாலை, கல்வே பங்களா மெயின் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மனோஜ் (வயது 27). கோவை தனியார் கல்லூரியில் பி. டெக் படித்து விட்டு, கனடா நாட்டில் விமான பயிற்சி நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விமானியாக பயிற்சி பெற்று வந்தார்.

விமான பயிற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோஜ், சென்னையை சேர்ந்த திருஞான சம்பந்தம் மகன் ஸ்ரீசரண் என்பவருடன் செஸ்னா 172 விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மனோஜ் மற்றும் ஸ்ரீசரண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கவர்னரிடம் மனு

விமான விபத்தில் உயிரிழந்த மனோஜ் உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர உதவிடுமாறு நேரு எம்.எல்.ஏ., தலைமையில் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற கவர்னர் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதுகுறித்து மாணவரின் தந்தை சிவக்குமார் கூறுகையில், எனது மகன் மனோஜ். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியன்று தொலைபேசியில் பேசினார். நவம்பருக்குள் பயிற்சியை முடித்துவிட்டு வருவதாக தெரிவித்தார்.

விமான விபத்து

இந்த நிலையில் இதுபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. எனது ஒரே மகனின் இழப்பு என் வாழ்க்கையையே முடித்து விட்டது. விமான விபத்து தொடர்பாக உண்மையில் என்ன நடந்தது? என்பது குறித்து தனக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, உரிய விளக்கம் பெற்றுத்தர வேண்டும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com