போலீஸ் காவல் மரணம்; குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு- சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மேல் முறையீட்டில் 4 பேரை விடுதலை செய்து கடந்த ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
போலீஸ் காவல் மரணம்; குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு-
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 28) என்ற வாலிபரை கடந்த 2005-ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். முதலில் போலீஸ் நிலையத்திலும், பின்னர் இன்ஸ்பெக்டரின் அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் அடித்ததில் காயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் மரணமடைந்தார்.

போலீஸ் காவலில் அவர் கடுமையாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதும், அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீசாருக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.

இதில் 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கோர்ட்டு, அதில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு விசாரணை நடந்து வந்தபோதே மரண தண்டனை பெற்ற ஒருவர் மரணமடைந்தார். மீதமுள்ள 4 பேரையும் விடுதலை செய்து கடந்த ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கு தொடர்பாக பதிலளிக்க குற்றவாளிகளுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே 19-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com