

கொல்கத்தா,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலமான 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைக்கு சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான இவர் கடந்த சில மாதங்களாக நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.
இவருக்கு கடந்த மாதம் ரத்த அழுத்த பக்கவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறியதால் வீடு திரும்பினார். ஆனால் கடந்த 7-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் காலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்ட அவர் மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நேற்று காலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி காலை 8.15 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 89. சோம்நாத் சட்டர்ஜியின் விருப்பப்படியே அவரது உடல் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்படுகிறது.
முன்னதாக அவரது உடல் கொல்கத்தா ஐகோர்ட்டு, மேற்கு வங்க சட்டசபை வளாகம் மற்றும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள சோம்நாத்தின் முன்னோர் வீடு ஆகிய இடங்களில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
சட்டசபை வளாகத்தில் அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார். சோம்நாத் சட்டர்ஜி அனைத்துக்கும் மேலானவர் எனக்கூறிய அவர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்.
சோம்நாத்தின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சோம்நாத்தின் மறைவு மேற்கு வங்காளத்தினர் மற்றும் இந்தியர்களின் பொதுவாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்திய அரசியலில் பலம் வாய்ந்த தலைவராக விளங்கிய சோம்நாத் சட்டர்ஜி நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை மிகவும் வலுவாக்கியதாக புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வுக்கான சக்திமிக்க குரலாக அவர் விளங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதைப்போல முன்னாள் துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னணி தலைவர் சுஜன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் சோம்நாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அசாம் மாநிலம் தேஸ்பூரில் 1929-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி பிறந்த சோம்நாத் சட்டர்ஜி, தனது படிப்பை கொல்கத்தாவிலும், இங்கிலாந்திலும் முடித்தார். சிறந்த சட்ட மேதையான இவர், இங்கிலாந்தில் இருந்து பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
இவரது தந்தையான என்.சி.சட்டர்ஜி அகில பாரத இந்து மகாசபாவின் ஆதரவாளர் ஆவார். அந்த அமைப்பின் தலைவராகவும் அங்கம் வகித்துள்ளார். எனினும் சோம்நாத் சட்டர்ஜி கம்யூனிச கொள்கைகளில் நாட்டம் கொண்டு இருந்தார். அதன்படி 1968-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து முன்னணி தலைவராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார்.
இவர் முதல் முறையாக 1971-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004-ம் ஆண்டு வரை 10 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வான இவர், ஒரேயொருமுறை மட்டுமே (1984) தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தார். அந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம் இவர் தோல்வி கண்டார்.
தனது கணீர் குரலாலும், நகைச்சுவையுடன் கூடிய பேச்சாலும் நாடாளுமன்ற விவாதங்களில் தனது கருத்தை தெளிவாக எடுத்துரைப்பார். இதனால் 1989-ம் ஆண்டு முதல் 2004 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை தலைவராக அவர் பணியாற்றினார். அத்துடன் ஏராளமான நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகும் வாய்ப்பும் பெற்றார்.
தனது விவாத திறமை, தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த பரந்த அறிவு போன்ற திறன்களால் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை 1996-ல் பெற்றார். சிறந்த நாடாளுமன்ற அறிவு பெற்றிருந்தமையால் மக்களவை சபாநாயகர் பதவி 2004-ல் இவரை தேடிவந்தது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் எவ்வித பாரபட்சமுமின்றி சபையை நடத்தினார்.
இவரது பதவிக்காலத்தில் இருந்துதான் மக்களவையின் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும் 24 மணி நேர லோக்சபா தொலைக்காட்சி சேனலும் இவரது பதவிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2008-ல் திரும்ப பெற்றது. எனவே இவரை பதவி விலகுமாறு கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொண்டது.
ஆனால் சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல எனக்கூறி, பதவி விலக அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2009-ல் தீவிர அரசியலில் இருந்தும் சோம்நாத் சட்டர்ஜி விலகினார். மறைந்த சோம்நாத் சட்டர்ஜிக்கு ரேணு என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நல குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமுற்றோம். அவரின் மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இந்த பிரிவினை தாங்கும் சக்தியை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தலை சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதியும், அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட முன்னாள் மக்களவைத் தலைவரும், நடுநிலை தவறாத நாயகரும், மக்களவைத் தலைவர்களில் தனிச் சிறப்புமிக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டிக்காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மன மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாதும் நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன் விழாவில் கருணாநிதியின் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஆரோக்கியமான அரசியல் கருத்துகளுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் நாடாளுமன்றத்தில் இடம் கொடுத்து ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச்சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும். இவ்வாறு இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்.
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அகில இந்திய காந்தி காமராஜ் கட்சியின் தேசிய தலைவர் இசக்கிமுத்து ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.