

அவரது மறைவுக்கு எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தொவித்து உள்ளனர்.
பிரபல கன்னட எழுத்தாளர் வெங்கட சுப்பையா. மைசூருவை சேர்ந்த இவர் பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வெங்கட சுப்பையா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 107. மைசூரு மகாராஜா கல்லூரியில் எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்த வெங்கட சுப்பையா, பெங்களூருவில் உள்ள விஜயா கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர் ஆவார்.
கன்னட சாகித்ய பரிஷத் தலைவராகவும் வெங்கட சுப்பையா பணியாற்றி உள்ளார். மேலும் கன்னட மொழியை பாதுகாக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதி இருந்தார். மேலும் 14-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கிய நூல்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
பத்மஸ்ரீ, ராஜ்யோத்சவா விருது, ஹம்பி பல்லைக்கழகத்தின் நாடோஜா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் வெங்கட சுப்பையா பெற்று இருந்தார்.
வெங்கட சுப்பையாவின் மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, மந்திரிகள் பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.