இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு


இறந்ததாக வெளியான தகவல்: நாளை நேரலையில் தோன்றுவதாக நித்தியானந்தா அறிவிப்பு
x

தனது எக்ஸ் வலைதளத்தில் ஜிப்லி போட்டோவை பகிர்ந்து இந்த அறிவிப்பினை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.

ஆமதாபாத்,

கதவைத்திற காற்று வரட்டும்' என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பிரபலமானவர் நித்தியானந்தா. ஆனால், ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்த நித்தியானந்தா, நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக 2022-ம் ஆண்டு மே மாதம் பரபரப்பாக தகவல் பரவியது.

அதற்கு பதில் அளித்த நித்தியானந்தா, 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சையில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்றும், பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை தனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பரபரப்பு கருத்தை வெளியிட்டார்.

மேலும், தான் சாகவில்லை என்றும், சமாதி மனநிலையை அடைந்திருப்பதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இடையிடையே சில வீடியோக்கள் வந்தாலும் அது பழைய வீடியோ என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. நிதியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டார்" என்று கூறினார். இதனால், நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியின் புதிய யுக்தி இதுவா? என்பதை ஆமதாபாத் போலீசார் விசாரித்து வந்தனர்.

சமாதி அடைந்ததாக தகவல் பரவிய நிலையில் நாளை (ஏப்ரல் 03-ந் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பக்தர்களுக்கு நித்யானந்தா விளக்கம் அளிக்கிறார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் ஜிப்லி போட்டோவை பகிர்ந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.



1 More update

Next Story