அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை உறுதி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 56 பேர் பலியானார்கள்; 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குஜராத் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

அகமதாபாத்,

2008-ம் ஆண்டு நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையையும், மீதி 11 பேருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

56 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி, தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 70 நிமிட இடைவெளியில் பல்வேறு பகுதிகளில் 21 குண்டுவெடிப்புகள் நடந்தன. காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுமதித்த மருத்துவமனையிலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 56 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் 78 பேர் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத்தில் போலீசார் பதிவு செய்த 20 வழக்குகளும், சூரத் நகரில் பதிவு செய்த 15 வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டன.

மரண தண்டனை

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத் தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 78 பேரில் 49 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. அவர்களில், தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 38 பேருக்கு மரண தண்டனையும், மீதி 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்தியாவில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது இதுவே முதல்முறை ஆகும்.

மேல்முறையீட்டில் உறுதி

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் 49 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜி, சமிர் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அதன்மூலம், 38 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

'சிமி' முன்னாள் தலைவர்

மரண தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களில், தடை செய்யப்பட்ட 'சிமி' இயக்கத்தின் முன்னாள் தலைவர் சப்தர் நகோரியும், குஜராத், மத்தியபிரதேசம், கேரளா, உத்தரபிரதேசம் உள்பட 11 மாநிலங்களைச் சேர்ந்த அவருடைய கூட்டாளிகளும் அடங்குவர். மேலும், குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அடுத்த ஆண்டு மார்ச் 30-ந்தேதிக்குள் மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com