

போபால்,
மத்தியபிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக மோகன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு உள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு நேற்று முன் தினம் ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் முதல்-மந்திரி மோகனை கொலை செய்துவிடுவேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் தனது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை போலீசில் சிக்கவைக்க அவரது செல்போன் எண்ணில் இருந்து முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்று மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரம் வெளியாகவில்லை.