

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், முதல்-மந்திரி சுவேந்து அதிகாரியை, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் தற்கொலை தாக்குதல் நடத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து பவானிப்பூர் காவல் நிலையத்திற்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
உடனடியாக பவானிப்பூர் காவல் நிலைய அதிகாரிகள், உஷாராகி மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், கார்டன் ரீச் பகுதியை சேர்ந்த, ஐ.டி. துறையில் பணியாற்றி வரும் ஹஸ்னீன் இக்பால் (வயது 27) என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
இந்த இ-மெயில் பெண்ணின் பெயரில் வந்துள்ளது. விசாரணையில், அந்த பெண் தனிப்பட்ட முறையில் ஹஸ்னீனுக்கு தெரிந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணையும், அவருடைய குடும்பத்தினரையும் விசாரணை வளையத்தில் சிக்க வைத்து, மனநெருக்கடிக்கு ஆளாக்க செய்யும் நோக்கில் ஹஸ்னீன் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுதவிர, கடந்த காலத்தில், தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் தவறாக வழிநடத்த கூடிய வகையிலான இதுபோன்ற போலியான இ-மெயில்களை அவர் அனுப்பியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடைய வீட்டில் நடந்த சோதனையில், கள்ள நோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அவர் ஐ.டி. துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். சைபர் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய அவர், அந்த பின்னணியில், மிரட்டல் இ-மெயில்களை அனுப்பி உள்ளார்.