

மணிப்பூரில் கள்ளசாராயத்தை குடித்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் உள்ள சக்பிகராங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நவம்பர் 18-ந்தேதி முதல் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. தற்போது வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் கலால் துறை ஆணையர் ஹுங்யோ வோர்ஷாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளசாராய விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பாக இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 17-ந்தேதி முதல் இதுவரை 2,419 லிட்டர் சட்டவிரோத சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை மட்டும் 1,967 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சாராயம் எங்கிருந்து பெறப்பட்டது, அதில் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சாராய மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மணிப்பூர் அரசு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், சட்டவிரோத சாராய விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்