இறந்த தந்தையின் வேலையை கருணை அடிப்படையில் மகளுக்கு வழங்க முடியாது- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

தந்தை இறந்து விட்டதால் அவரது வேலையை கருணை அடிப்படையில் கணவருடன் வாழும் மகளுக்கு வழங்க முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.
இறந்த தந்தையின் வேலையை கருணை அடிப்படையில் மகளுக்கு வழங்க முடியாது- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு:-

கருணை அடிப்படையில் வேலை

பெங்களூருவில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் தந்தை எல்.ஐ.சி.யில் பணியாற்றி இறந்து விட்டார். இதையடுத்து, தனது தந்தை இறந்து விட்டதால் கருணை அடிப்படையில் தனக்கு எல்.ஐ.சி.யில் வேலை வழங்க உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தந்தை இறந்து விட்டதால், அவரது வேலையை கருணை அடிப்படையில் வழங்குவதற்கு எல்.ஐ.சி.க்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நிராகரித்து விட்டது.

திருமணமாகி கணவருடன் சேர்ந்து...

மேலும் தலைமை நீதிபதி பி.பி.வரலே கூறும் போது, அந்த பெண்ணின் தந்தை உயிரிழக்கும் முன்பாகவே திருமணமாகி கணவருடன் சேர்ந்து வாழ்கிறார். இதுபோன்று, கணவருடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கு தந்தையின் வேலையை கேட்கும் உரிமை இல்லை. மாறாக அந்த பெண் வறுமையில் வாடினால் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம். தந்தை இறந்த பின்பு எல்.ஐ.சி.யில் இருந்து ரூ.1.58 கோடி கிடைத்துள்ளது.

எனவே தந்தையின் வேலையை மகளான பெண்ணுக்கு வழங்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடம் இல்லை. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி பி.பி.வரலே தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com