

பள்ளிகள் திறப்பு
மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த மாதம் மாநிலத்தின் கொரோனா பாதிப்புகள் குறைந்த ஊரகப்பகுதிகளில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகர்பகுதிகளில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. நகர்புறங்களில் 2020 மார்ச் முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் மும்பையில் பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர் இடையே எழுந்து உள்ளது.
தீபாவளிக்கு பிறகு முடிவு
முன்னதாக வல்லுநர்கள் கமிட்டி பள்ளிகளை திறக்கும் முன் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என மாநில அரசுக்கு, பரிந்துரை செய்து இருந்தது. இதேபோல மாநிலத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்கவும் மாநில குழந்தைகள் நல பணிக்குழுவும் பச்சைக்கொடி காட்டி உள்ளது.
இந்தநிலையில் மும்பையில் பள்ளிகளை திறப்பது குறித்து தீபாவளிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என நேற்று மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியுள்ளார். மேயரின் இந்த தகவலை அடுத்து, தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்தால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மும்பை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.