ஈரான் மீது தாக்குதல்... பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரியுமா? - இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி விளக்கம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது தாக்குதல்...  பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரியுமா? - இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி விளக்கம்
Published on

டெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 25ம் தேதி இஸ்ரேல் சென்றார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கடந்த 26ம் தேதி நாடு திரும்பினார். பிரதமர் மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்து நாடு திரும்பிய 2 நாட்கள் கழித்து (28ம் தேதி) ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரியுமா? என்றும், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் ராஜாங்க ரீதியில் தோல்வியின் வெளிப்பாடு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரியுமா? என்பது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியான் சயிர் விளக்கம் அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடல் நிகழ்ச்சியில் காணொளி மூலம் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சயிர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியுடனும், இந்தியாவுடனும் இஸ்ரேல் பல ஆண்டுகளாக சிறந்த உறவு நிலவி வருகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 28ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலைதான் முடிவெடுத்தோம். இதனால் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து தெரிவிக்க முடியவில்லை. பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீதான தாக்குதல் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா - ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்தே தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஈரானில் இருந்து வெளிப்பட்ட அச்சுறுத்தலை நீக்க தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com