புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20-ந்தேதிக்கு பிறகு முடிவு: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

பள்ளிகள் திறப்பது குறித்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20-ந்தேதிக்கு பிறகு முடிவு: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

அரவிந்தர் பிறந்தநாள்

மகான் அரவிந்தரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. பக்தர்கள் அரவிந்தர், அன்னையின் சமாதியில் தரிசனம் செய்தனர். புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை அஜாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயால் ஒரு உற்சவமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது.

20-ந் தேதிக்கு பிறகு...

மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி மத்திய கலாசாரத்துறை ஒரு குழுவை அமைத்து ஆண்டு முழுவதும் இது விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியிருக்கிறது. முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து அதேபோல ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன்.

ஆகஸ்டு 15-க்குள் 100 சதவீத தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு செயல்பட்டோம். தற்போது 60 சதவீத தடுப்பூசி செலுத்தியுள்ளோம். மக்கள் இன்னும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தால் 100 சதவீதத்தை எட்டியிருக்க முடியும். நம்முடைய நடவடிக்கைகளால் 38 கிராமங்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கிராமங்களாக மாறியுள்ளன. இரவில் சென்று தடுப்பூசி போடும் முறையையும் புதுச்சேரியில்தான் நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

புதுவையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வி நிறுவனங்கள், துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பெற்றோர் அனைவரையும் கலந்தாலோசித்து 20-ந்தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்க கல்வித்துறையை கேட்டுள்ளேன். அதன்பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

பெட்ரோல் விலை குறைப்பு

பள்ளிகளை பொறுத்தமட்டில் அவசரமாக திறக்க முடியாது. சில மாநிலங்களில் திறந்துவிட்டு மூடியுள்ளனர். சில மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பாகவே நாம் வாட் வரியில் 2 சதவீத்தை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.80 குறைத்தோம்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முன்னதாக நேற்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் யானை லட்சுமிக்கு பழங்கள் கொடுத்ததுடன், ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com