

புதுடெல்லி,
இந்தியத் தலைநகர் டெல்லியில், இன்று காற்று மாசு அதிகமாக உள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவுடன் புகை மூட்டமும் இணைந்து காட்சி அளித்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களும் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர். அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரித்ததால் இந்த கடுமையான புகை மூட்டம் டெல்லியில் ஏற்பட்டதாக தெரிகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மாநில அரசுகளை கண்டித்துள்ளது.
காற்று மாசு காரணமாக பள்ளி மாணவர்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் பள்ளிகளில் மைதானங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் பிற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (IMA) டெல்லி அரசைகேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, காற்று மாசு அதிகமாக உள்ளதால், பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு இருந்தார். தொடர்ந்து கல்வி, சுகாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் துறை அலுவலர்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
கல்வித்துறை மந்திரியாகவும் உள்ள மனிஷ் சிசோடியா, நகரில் நிலவும் காற்று மாசு குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றியும், வாகன கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது பற்றியும் அரசு முடிவு செய்யும் என்று மனிஷ் சிசோடியா தெரிவித்தார்.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனை நேரில் சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படும் விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பல முறை வற்புறுத்தியிருப்பதாகவும், ஆனால், மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மனிஷ் சிசோடியா தெரிவித்தார்.