மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து 26-ந்தேதி முடிவு - சன்னி வக்பு வாரியம் தகவல்

மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து 26-ந்தேதி முடிவு செய்யப்படும் என சன்னி வக்பு வாரியம் அறிவித்து உள்ளது.
மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து 26-ந்தேதி முடிவு - சன்னி வக்பு வாரியம் தகவல்
Published on

லக்னோ,

அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் தனியாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலத்தை ஏற்பது தொடர்பாக வக்பு வாரியம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது குறித்து விரிவாக விவாதிப்பதற்காக வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் 26-ந்தேதி நடைபெறும் என வாரியத்தின் தலைவர் ஜுபர் பரூக்கி தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதை எதிர்த்து மறு ஆய்வு செய்வது தொடர்பான எந்த திட்டமும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மசூதி கட்டுவதற்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது தொடர்பாக எனக்கு பலதரப்பட்ட பரிந்துரைகள் வருகின்றன.

குறிப்பாக மசூதி கட்டுவதற்காக இந்த நிலத்தை வாங்கக்கூடாது என பலர் தெரிவிக்கின்றனர். இது எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, வேதனைக்குள்ளாக்கி இருக்கும் இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவும், எதிர்மறை எண்ணங்களை தடுக்கவும் நேர்மறையான அணுகுமுறையே வேண்டும் என கருதுகிறேன்.

அதேநேரம் அரசு வழங்கும் நிலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர். அந்த நிலத்தில் மசூதியுடன் சேர்த்து கல்வி நிறுவனம் ஒன்றையும் கட்ட வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் நிலம் வழங்குவதை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படிதான் அரசு நடந்து கொள்ளும்.

எனவே மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து எங்கள் பொதுக்குழு கூட்டத்தில் பேசி முடிவு செய்வோம். இந்த கூட்டம் 13-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 26-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில் நாங்கள் இது குறித்து முடிவு செய்வோம்.

இந்த நிலத்தை ஏற்பது என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்தால், அதை எப்படி பெறுவது? அதற்கான நிபந்தனைகள் குறித்தும் பேசி முடிவு செய்வோம். இவ்வாறு ஜுபர் பரூக்கி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com