பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு

பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமாரின் அரசின் பதவி காலம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து, 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 22-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்களின்போது, தேர்தல் கமிஷனின் கண் மற்றும் காதுகளாக பொது, போலீஸ் மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு 470 அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்கப் போவதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. அவர்களில் 320 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். 60 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். 90 பேர் இதர பணியை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி, பணி குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது. மறுநாள் (4-ம் தேதி) தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பீகார் செல்கிறார்கள்.






