கர்நாடகத்தில் 7,000 வகுப்பறைகளை சீரமைக்க முடிவு; மந்திரி பி.சி.நாகேஸ் பேச்சு

கர்நாடகத்திதில் அரசு பள்ளிகளில் 7,000 வகுப்பறைகளை சீரமைக்க முடிவு செய்துள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
மந்திரி பி.சி.நாகேஸ்
மந்திரி பி.சி.நாகேஸ்
Published on

பெங்களூரு:

கர்நாடக பாடநூல் குழு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி பாடத்திட்டத்தில் கர்நாடக பாடநூல் கழக குழுவால் திருத்தம் செய்யப்பட்டது. இதில் கர்நாடகத்தின் சமூக சிந்தனையாளர் என்று வர்ணிக்கப்படும் பசவண்ணரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தேசியகவி குவெம்பு மற்றும் ஏராளமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் நீக்கப்பட்டதாலவும், சில தலைவர்களைப் பற்றிய தகவல்களில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

ரத்து

இதற்கிடையே கர்நாடக பாடநூல் கழக தலைவர் ரோகித் சக்ரதீர்த்த, தேசியகவி குவெம்புவை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் எதிர்க்கட்சிகள் கண்டித்தன. மேலும் போராட்டங்களிலும் ஈடுபட்டன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

அப்போது கர்நாடக பாடநூல் குழுவை ரத்து செய்வது என்றும், அரசு பள்ளிகளை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக பாடநூல் குழு ரத்து பற்றி அறிவிப்பு வெளியானது.

தயக்கம் காட்டினர்

இந்த நிலையில் நேற்று பெங்களூரு விஜயநகரில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை திறக்க தயக்கம் காட்டினர். ஆனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கர்நாடகத்தில் பள்ளிகளை தையமாக திறந்தோம். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் நடத்தினோம்.

ஆசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் 7 ஆயிரம் வகுப்பறைகளை சீரமைக்க முடிவு செய்துள்ளோம். மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களில் வகுப்பறைகளை சீரமைக்க முன்னுரிமை அளிக்கிறோம். 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதற்கான விடைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் கவுரவ ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்துள்ளோம். தொடக்கத்திலேயே இந்த முடிவு எடுத்துள்ளதால் எந்த அரசு பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. பிரதமராக மோடி வந்த பிறகு கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அமல்படுத்துகிறோம்.

தேசிய கல்வி கொள்கை

நடப்பு ஆண்டிலேயே அங்கன்வாடிகளில் இந்த கல்வி கொள்கைப்படி பாடத்திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வசதியாக சில விவரங்கள் அடங்கிய ஆவணங்களை மத்திய அரசின் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.

இதில் வீட்டு வசதி மந்திரி சோமண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com