இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.

இதற்கிடையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டனர். அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் நாம் பேசுவதில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், தனது டுவிட்டர் பக்கத்தில், போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்று பதிவிட்டார். மேலும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ், நடிகை மியா கலிஃபா, நடிகை அமேண்டா செர்னி உள்ளிட்ட பலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் அவற்றை இந்திய மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய அரசிற்கு நம் விவசாயிகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com