

மும்பை,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2014-ம் ஆண்டு பிவண்டியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் சங்பரிவார் இருப்பதாக பேசியதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தியின் பேச்சு ஆர்.எஸ்.எஸ். பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் மீது ராஜேஷ் குந்தே என்ற தொண்டர், தானே மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
2018-ம் ஆண்டு ராகுல்காந்தி அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்தார். இதையடுத்து அவதூறு வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என தானே கோர்ட்டு கூறியுள்ளது. இதுகுறித்த உத்தரவை பிவண்டி மாஜிஸ்திரேட்டு ஜே.வி. பாலிவல் பிறப்பித்து உள்ளார். மேலும் நாள்தோறும் நடைபெறும் விசாரணைக்கு தயாராக இருக்கிறார்களா? என ராகுல்காந்தி, புகார்தாரர் தரப்பு வக்கீல்களிடம் கோர்ட்டு கேட்டுள்ளது.
சமீபத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே ராகுல்காந்திக்கு எதிரான வழக்கை நாள்தோறும் நடத்தி விரைவில் முடிக்க வேண்டும் என கோர்ட்டு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.