சுவாமி அய்யப்பனுக்கு எதிரான அவதூறு பேச்சு; 2 நாட்களுக்கு பின் நரேஷ் கைது

சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறாக பேசிய பைரி நரேஷ், தெலுங்கானாவில், தொடர் போராட்டம் எதிரொலியாக 2 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சுவாமி அய்யப்பனுக்கு எதிரான அவதூறு பேச்சு; 2 நாட்களுக்கு பின் நரேஷ் கைது
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாரத நாத்திக சமாஜம் மாநில அமைப்பின் தலைவர் பைரி நரேஷ் என்பவர் சுவாமி அய்யப்பனுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா முழுவதும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடந்தன. பா.ஜ.க. மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நரேசுக்கு எதிராக போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதில் புகாரளித்த நபர், நரேஷ் அவதூறாக பேசிய வீடியோவை சமூக ஊடக வலைதளத்தில் பார்த்தேன். அதில், பேசிய விசயங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலும், கேலி செய்யும் எண்ணத்துடனும் உள்ளது தெளிவாக தெரிகிறது.

அய்யப்ப தீட்சை எடுத்த பக்தர்களை புண்படுத்தும் உள்நோக்குடன் பேசியதும் தெரிகிறது. இதனால், தனது மத உணர்வுகளும் அதிகம் புண்பட்டு உள்ளது என புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், மதம் அல்லது மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்குடனான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த நபர் தப்பியோடி உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இந்து தர்மம் மற்றும் இந்து கடவுள்களை துஷ்பிரயோகம் செய்வது, புண்படுத்துவது நாட்டில் ஒரு பேஷன் ஆகி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார். முறையாக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காத சூழலில், இதுபோன்ற விமர்சனங்களை தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிராக பேசுவது அதிகரித்து வருகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில், ஹனம்கொண்டா மாவட்டத்தில் வைத்து போலீசார் நரேஷை இன்று கைது செய்துள்ளனர்.

அவர் மீது பக்தர்கள் பலர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து உள்ளனர். நடிகை மற்றும் பா.ஜ.க. தலைவரான கராத்தே கல்யாணி என்பவரும் போலீசில் புகார் அளித்துள்ளார். ஐதராபாத் குற்ற பிரிவு போலீசாரும் அவருக்கு எதிராக, அவதூறாக பேசியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் சுவாமி அய்யப்பனின் பிறப்பு பற்றி அவதூறாக பேசியதுடன், கடவுள்கள் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு எதிராகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் நரேஷ் குறிப்பிட்டு உள்ளார்.

இதுபோன்ற விசயங்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்-மந்திரி நடந்து கொள்கிறார் என்றும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்றும் பண்டி சஞ்சய் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பெண் கடவுளான சீதையை புண்படுத்திய முனாவர் பரூக்கிக்கு பாரத ராஷ்டீரிய சமிதி கட்சி பாதுகாப்பு அளிப்பதுடன், சுவாமி அய்யப்பன் பிறப்பு பற்றி அவதூறு பேசுவதற்கான கூட்டங்களை நடத்தி கொள்வதற்கு அனுமதியும் கொடுத்துள்ளது என சஞ்சய் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com