

புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசனத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வக்கீல் எம்.எல்.சர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், மாநில சட்ட சபையின் அனுமதியின்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இது சட்டரீதியாக தவறானது என கூறப்பட்டு இருந்தது.
இதுதவிர காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசின் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காஷ்மீரில் இணையதள சேவை மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ரத்துசெய்யப்பட்டு பத்திரிகையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு நிலவும் உண்மையான சூழல்களை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கான சுதந்திரம் கிடைக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 2 மனுக்களும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி மனுதாரர் வக்கீல் எம்.எல்.சர்மாவிடம், உங்கள் கோரிக்கை என்ன? இதுபோன்று அரைகுறையாக ஒரு மனுவை எப்படி நீங்கள் தாக்கல் செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்த மனுவை அரை மணி நேரத்துக்கும் மேலாக படித்தும் என்ன சொல்கிறீர்கள் என்று எதுவும் புரியவில்லை என்று கூறினார். இதற்கு மனுதாரர் எம்.எல். சர்மா மன்னிப்பு கோரினார்.
இந்த விவகாரத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 மனுக்களில் 4 மனுக்கள் அரைகுறையாக உள்ளன. அயோத்தி வழக்கின் இடையில் இவற்றை விசாரிக்க நேரம் ஒதுக்கினோம். ஆனால் என்ன பயன்? அனைத்து மனுதாரர்களும் தங்கள் மனுக்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி, உரிய வகையில் திருத்தி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இந்த மனுக்களின் மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பசின் தரப்பில் ஆஜரான வக்கீல் பிருந்தா குரோவர், பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்கள் தடையின்றி செல்வதற்கு அனுமதித்தால் அவர்களுக்கு அது பெருமளவில் உதவி செய்யும் என்று கூறினார்.
காஷ்மீரில் தொலைபேசி தொடர்புகள் செயல்பட தொடங்கியிருப்பதாக செய்தித்தாள்களில் வாசித்ததாக தலைமை நீதிபதி கூறினார். நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியிடம் இருந்து தனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததாக குறிப்பிட்டார். இதற்கு பிருந்தா குரோவர், வெகுசில தொலைபேசி தொடர்புகள் மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளதாக கூறினார்.
அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், காஷ்மீரில் இப்போது நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனவே இப்போது திடீரென ஒரு முடிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறும்போது, காஷ்மீரில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள். வெகு விரைவில் சகஜநிலை அங்கு திரும்பும். அதற்கு சிறிது காலம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து, காஷ்மீரில் நிலைமையை மறுபரிசீலனை செய்ய கோர்ட்டு மத்திய அரசுக்கு மேலும் சிறிது அவகாசம் அளிக்கிறது என்றும், இந்த மனுக்கள் மீதான விசாரணை தேதியை நிர்வாகரீதியாக பதிவாளர் அலுவலகம் முடிவு செய்யும் என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.