

புதுடெல்லி,
உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 21,700 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக மே 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் முற்றிலும் சரியாகும்வரை ஆயுத கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக அதிக அளவில் நிதி செலவிடப்படுவதால், தற்போது ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து S400 ஏவுகணைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து டாங்கிகள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகளையும் இந்திய ராணுவம் வாங்குகிறது. அதே நேரத்தில் கடற்படை சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து 24 மல்டிரோல் சாப்பர்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.