

ஐதராபாத்,
ஐதராபாத் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அது பயங்கரவாதம் தான் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உலகுக்கு புரிய வைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் சகிப்பு தன்மையை கடைப்பிடிக்க முடியாது. பயங்கரவாதத்தை வளர்க்க உதவியவர்கள், பல ஆண்டுகளாக அல்லது மறைமுகமாக அதனை ஆதரித்தவர்கள் தற்போது அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் சேர விரும்புகிறார்கள்.
ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ய பாகிஸ்தான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பாபர், கொரி, கஸ்னவி என ஏவுகணைகளுக்கு பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்திய பாதுகாப்பு படைகள் எந்த நாட்டையும் தாக்குவதில்லை. அனைத்து விதத்திலும் இந்திய ராணுவம் அமைதி மற்றும் நிலைத்தன்மையையே கடைப்பிடிக்கிறது.
அமைதி, சமநிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா ஏவுகணைகளுக்கு ஆகாஷ், அக்னி, பிரம்மோஸ், திரிசூல் என பெயரிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.