

புதுடெல்லி,
பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. ஜம்மு நகரில் உள்ள பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சூழலில், அங்கு பட்காம் மாவட்டம் காசிபோரா சந்தூரா என்ற இடத்தில் தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரரை நேற்று மாலை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மேற்கண்ட தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகம்மது யாசீன் பாதுகாப்பாக இருப்பதாகவும், இது தொடர்பான ஊகங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கிஸ்துவாரில் துணை ஆணையரின் தனிப்பட்ட பாதுகாவலராக உள்ள பாதுகாப்பு அதிகாரியின் வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கி திருடு போயிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.