

புதுடெல்லி,
இந்திய விமானப்படைக்கு ஜிசாட்-7சி என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வாங்க ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 563 கோடி மதிப்புள்ள இந்த செயற்கைக்கோள் வாங்க பெங்களூருவில் உள்ள நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது.
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பாதுகாப்பான, தடையற்ற தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த உதவும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
அதுபோல், 'வருணாஸ்திரா' என்ற நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளை ரூ.1,543 கோடிக்கு வாங்க ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஏவுகணைகள், நேவல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிக்கல் லேபரட்டரியால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. நீண்ட தொலைவில் வரும் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை நமது கப்பலில் இருந்து ஏவி தாக்க முடியும். இதன்மூலம் இந்திய கடற்படையின் போர்த்திறன் மேம்படும் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
2 ஒப்பந்தங்கள் தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கை என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
மொத்தம் ரூ.4 ஆயிரத்து 106 கோடி செலவில் தகவல் தொடர்பு செயற்கைக்கோளும், நீர்மூழ்கி தகர்ப்பு ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன. பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளர் மற்றும் தலைமை இயக்குனர் (கொள்முதல்) அன்பரசு முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.