ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறான தகவல், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறான தகவல் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறான தகவல், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி
Published on

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இது குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி வந்தார். ஆனால், இது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒப்பந்தம் என்பதால் இதுபற்றி தெரிவிக்க முடியாது என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்தார்.

இப்பிரச்சினையை நேற்று நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எழுப்பிய ராகுல்காந்தி, டெல்லியில் நான் பிரான்ஸ் அதிபர் மேக்ரனை சந்தித்தபோது, அவர் ரபேல் ஒப்பந்தம் ரகசியமான ஒன்று அல்ல என்று என்னிடம் சொன்னார். எனவே, நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு நிர்மலா உடனே எழுந்து பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரகசியமான ஒன்றுதான். 2008-ம் ஆண்டு அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஒப்பந்தம் செய்தபோதும் இது ரகசியமான ஒன்றாகத்தான் இருந்தது. ராகுல்காந்தியிடம் பிரான்ஸ் அதிபர் தனிப்பட்ட முறையில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் (மேக்ரன்) அளித்த பேட்டிகளில் கூறியதை இங்கே தெரிவிக்கிறேன்.

இந்த பேட்டி ஒன்றில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் வர்த்தக ரீதியானது. எனவே இது பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று பிரான்ஸ் அதிபர் மறுத்து இருக்கிறார். இன்னொரு பேட்டியில், இது வர்த்தக ஒப்பந்தம். இதில் நிச்சயம் போட்டியாளர்கள் இருப்பார்கள். எனவே இது தொடர்பான தகவல்கள் எதையும் தெரிவிக்க இயலாது என்று பதில் அளித்து உள்ளார். எனவே ராகுல்காந்தி இங்கே கூறியது முற்றிலும் தவறான தகவல். அவர் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com