

புதுடெல்லி,
பீகாரின் தர்பங்கா நகரில் இருந்து டெல்லிக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 210 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து, இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம், தனியாக கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. பயணிகள், அவர்களின் உடைமைகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன.
இதில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை. அந்த தகவல் புரளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், பீகாரின் சுபால் நகரை சேர்ந்த ஜெய் கிருஷ்ண குமார் மேத்தா என்பவர் விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என புரளியை பரப்பியது தெரிய வந்தது.
அவருக்கு எதிராக குருகிராம் நகரில் உள்ள உத்யோக் விஹார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இருந்து அவர் விமான நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். டெல்லி போலீசாரும் தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட அந்நபர் பின்பு குருகிராம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தொலைபேசியில் கிஷோர் என கூறி விட்டு கூறும்போது, எஸ்.ஜி.-8496 என்ற எண் கொண்ட தனியார் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இரண்டு பேர் பேசி கொண்டு இருந்தனர். இதனை நான் கேட்டேன் என கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, டெல்லி விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. ஏனெனில், அந்த விமானம் அதற்கு முன்பே தர்பங்காவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து, விமானத்தில் முழு அளவில் சோதனை செய்யப்பட்டது. அதில், வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது.
தொழில் நுட்ப உதவியுடன், நொய்டா நகரில் வைத்து ஜெய் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், பீகாரில் உள்ள மகத பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் அவர் என்பதும், பி.பி.ஓ. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் தெரிய வந்தது.
அவர் தர்பங்கா விமான நிலையத்திற்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. அதனால், விமானம் புறப்படாமல் இருப்பதற்காக இந்த வெடிகுண்டு புரளியை கிளப்பியதும் தெரிய வந்தது என போலீசார் கூறினர்.