

புதுடெல்லி,
டெல்லியில், உலக உணவு இந்தியா 2023-க்கான நிகழ்ச்சி பற்றி மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் மற்றும் ஜலசக்தி துறையின் இணை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பேசினார். அவர் கூறும்போது, இந்தியாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது, உலகளாவிய பங்குதாரர்களின் முன் இந்த துறையின் ஆற்றலை ஊக்குவிக்கும் முயற்சியாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 16 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெற ஒப்பு கொண்டுள்ளனர். தொடர்ந்து கூடுதலாக வேறு சில பங்குதாரர்களும் கலந்து கொள்ள கூடும் என கூறியுள்ளார்.
இதன்படி, டெல்லி பிரகதி மைதான் பகுதியில் பாரத் மண்டபத்தில் வருகிற நவம்பர் 3 முதல் 5 வரையிலான 3 நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் மற்றும் ஜலசக்தி துறை மந்திரி பசுபதி குமார் பராஸ் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நவம்பர் 5-ந்தேதி பங்கேற்று உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் 60 முதல் 80 சமையல் கலைஞர்கள் இணைந்து பணியாற்றி 100 அடி நீளம் கொண்ட தானிய தோசை ஒன்றை உருவாக்க உள்ளனர். உலகின் மிக நீள தோசை என்ற கின்னஸ் சாதனையை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது என அதுபற்றி மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் மற்றும் ஜலசக்தி துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.