

புதுடெல்லி,
டெல்லியில் போலி 20 ரூபாய் நாணயங்களைத் தயாரித்து, சட்டவிரோதமாக சந்தையில் விநியோகம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லி முண்ட்கா தொழிற்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அன்று, காவல்துறை குற்றப்பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.
அதில் காரில் 50 பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 போலி 20 ரூபாய் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 1 லட்ச ரூபாய் ஆகும். இதையடுத்து காரை ஓட்டி வந்த கள்ள நாணய விநியோகஸ்தரான பரஸ் ஜெயின் என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
பரஸ் ஜெயினிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இந்த கும்பலின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட உப்கர் லுத்ரா மற்றும் அவனது கூட்டாளிகளான அனுராக் பால், ஜனார்த்தன் குமார் ஆகியோரது விவரங்கள் வெளிவந்தன. இவர்கள் அரியானாவின் சோனிபட் பகுதியில் இயங்கி வந்த தங்களது போலி நாணயத் தயாரிப்பு தொழிற்சாலையை, போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூருக்கு மாற்ற முயன்றனர்.
அப்போது, சஹாரன்பூர் உள்ளூர் போலீசாரால் இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற வாரண்ட் மூலம் சஹாரன்பூர் சிறையிலிருந்த உப்கர் லுத்ரா உள்ளிட்ட 3 பேரையும் டெல்லிக்கு கொண்டு வந்து முறையாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் தயாரிக்கும் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நாணயங்களை, சந்தையில் விநியோகம் செய்வதற்காக 70,000 அசல் ரூபாய்க்கு கைமாற்றி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், இதுவரை சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட போலி நாணயங்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.